ஈழம் - இலங்கைச் செய்திகள்
ஈழத்தமிழர்கள் தொடர்பில் இந்தியாவிடம் பாரிய மாற்றம் : அடைக்கலநாதன்

[ பிரசுரித்த திகதி : 2010-07-25 07:52:25 AM GMT    ]

கடந்த காலங்களை விட ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதனை அண்மைய எமது விஜயத்தின் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரையும் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மேலும் இந்திய அரசு உயரதிகாரிகளுடனும் சில கலந்தாலோசனைகளை நடத்தியிருக்கிறார்கள். இருதரப்பிலும் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் வீரகேசரி வார வெளியீட்டிற்கு அவர் அளித்த சிறப்பு செவ்வி இது.

திடீரென்று புதுடெல்லி சென்றீர்கள். பின்னர் திடீரென்று தமிழகம் வந்து தல்வர் கருணாநிதியைச் சந்தித்தீர்கள். இம்றை நீங்கள் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணத்தின் முக்கியவத்துவம் குறித்து?

இது திடீரென்று மேற்கொண்ட பயணம் என்று சொல்வது தவறு. இது முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் என்பதுதான் சரி. இலங் கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்களது நிரந்தர விருப்பம், அபிலாஷை. அதைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலேயே இப்பயணத்தை மேற்கொண்டோம்.

மத்திய அரசுக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ளவர் என்ற வகையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்ற வகையில் முதல்வர் கருணாநிதியையும் சந்தித்தோம். இது அதிகாரப்பூர்வமான சந்திப்பு. அந்த வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதுடில்லி பயணத்தின்போது யாரையெல்லாம் சந்தித்துப் பேசினீர்கள்?

ஆறு பேர் கொண்ட குழுவினர் சம்பந்தன் தலைமையில் டில்லி சென்றோம். அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மிக விரிவாக உரையாடினோம். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.

மேலும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உட்பட பலரையும் சந்தித்துப் பேச முடிந்தது.

இந்தியப் பிரதமருடன் விவாதித்த விடயங்கள் குறித்து விபரிக்க முடியுமா?

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த போது, இலங்கையில் எங்களுடைய மக்கள் படுகின்ற அவதிகள் குறித்துதான் அதிகம் பேசினோம். தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட ழுமையாகச் செய்து கொடுக்கப்பட வில்லை. இலங்கை அரசாங்கம் இதற்குரிய பணிகளைச் சரிவர செய்யவில்லை.

இதை இந்தியப் பிரதமரிடம் தெரியப்படுத்தினோம். இரண்டாவதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்கள் முன்பு வாழ்ந்த கிராமங்களில் சில கிராமங்களை இராணுவம் தன் வசப்படுத்தும் நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. இவ் விரண்டு விவகாரங்கள் குறித்து அதிகம் விவாதித்தோம். மேலும் அரசியல் தீர்வுத் திட்டத்திலும் தமிழ் மக்களுக்கு நியாயம் உரிமையும் கிடைக்க உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், இணைந்த வடகிழக்கில் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்றும் எங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

எங்களைப் பொறுத்தவரையில் இந்திய அரசுத் தரப்பிடம் நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும், எழுப்பியுள்ள அனைத்துக் கோரிக்கைகளும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பானவை. இலங்கையில் இன்னும் 50 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில்தான் உள்ளனர். அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் இந்தியப் பிரதமருடன் பேசினோம்.

உங்களுடனான விவாதங்கள், முன் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தியப் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து?

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்வது வாழ்வாதாரப் பிரச்னை என்பதை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார். முதற்கட்டமாக மீள் குடியேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதன் தொடர்பில் முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகள் தமிழர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர புகையிரத பாதைகளை அமைத்துக் கொடுப்பதிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் எங்களிடம் கூறினார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா, இலங்கை இடையே நிலவும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்திய அரசு தமிழர்களின் நலன் காக்க முழு மூச்சுடன் செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமரிடம் வட கிழக்கு இணைப்பு குறித்தும் அதற்கு தேவையான நட வடிக்கைகள் குறித்தும் ஏதும் விவாதித்தீர்களா?

இந்தியப் பிரதமர், அரசைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு சமஷ்டித் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கான முயற்சிகளில் இந்திய அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கும் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. வட கிழக்கு இணைப்பு தொடர்பில் என்னென்ன விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது முக்கியம் அல்ல. அதைக் கடந்து தமிழர்களின் நலன் கருதி, அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான தீர்வொன்று அமையும் என்று இந்திய அரசு கூறுவதுதான் முக்கியம்.

அண்மைய சில வருடங்களில் ஒருசில முறை கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இம்முறை இந்திய அரசுத் தரப்பில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டனவா?

இது சரியான கேள்விதான். கடந்த காலத்தைவிட இப்போது நிறைய வித்தியாசங்களை எங்களால் உணர முடிகிறது. குறிப்பாக இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் இருப்பதை எங்களால் உணர முடிந்தது.

அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க முயற்சிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு முனைப்புடன் உள்ளதும் உண்மை. புதுடெல்லியில் இலங்கை அரசாங்கத் தரப்பிற்கு எந்தளவு கௌரவம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ அதே வகையிலான வரவேற்பும் உபசர ணையும் தமிழ் மக்கள் சார்பாக அங்கு சென்ற எங்களுக்கும் கிடைத்தது.

தமிழ் மக்களை கௌரவிக்கும் வகையில் எங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

தமிழக முதல்வருடனான சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து?

இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்களைப் பொறுத்தவரையில், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைபைப் பொறுத்தவரையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் எங்களுடைய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும் என உறுதியாக நம்புகிறோம்.

குறிப்பாக தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க டில்லி நடுவண் அரசை நிர்ப்பந்தப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க இயலும் என்பது எங்களுடைய நம்பிக்கை. அந்த வகை யில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்திய நடுவண் அரசிடம் பேசி நல்ல விதமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதைச் செய்வதற்கு தமிழக முதல்வர் தான் சரியான மனிதர். இலங்கைத் தமிழ் மக்களின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை, அன்பு அலாதியானது.

அந்த அடிப்படையில் அம்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவரது முயற்சியால் எங்களுடைய மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறதா?

முதல்வர் கலைஞரைப் பொறுத்தவரையில் அவர் எங்களுடன் தேர்தலை மையப்படுத்தி, அதனுடான நோக்கத்துடன் பேசியதாகத் தெரியவில்லை. அவர் உணர்வுபூர்வமாகத் தன் கருத்துகளைத் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் நலமோடு வளமோடு வாழவேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்.

அவரை நேரில் சந்தித்த போது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்பியது தொடங்கி, தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகள் குறித்தும் எங்களிடம் விபரித்தார். ஆக அவருடனான சந்திப்பு என்பது ஆக்க பூர்வமான முயற்சி என்பதே உண்மை. இதன் வழி பல நல்ல விஷயங்கள் விரைவில் நடந்தேறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்தும், இலங்கை விவகாரம் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் தமிழக முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து?

இலங்கையில் தமிழ் மக்கள் என்னென்ன வகையிலே இடையூறுகளைச் சந்திக்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் வாழ்க்கையோட்டத்தில் சிரமப்படுகிறார்கள் என்று கருணாநிதி அக்கறையுடன் விசாரித்து அறிந்தார். மக்களின் இன்னல்கள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்து அவ்வப்போது அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்ப்பதற்குண்டான கடப்பாடு, கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார். தமிழர்கள் அரசியல், சமுதாய, நடைமுறை வாழ்க்கை ரீதியில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிதானமாகவும் உரிய கடமை உணர்வோடும் நிதானமாகவும் செயல்பட வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தினார்.

இலங்கையில் அங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து எங்களுடைய நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசக்கூடியவற்றைத் தொகுத்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் கருணாநிதி, அப்பிரச்சினைகளை இந்திய நடுவண் அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று நல்ல தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதற்கான தனது பங்களிப்பு நூறு விழுக்காடு இருக்கும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தது மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இந்திய அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளும்கூட இலங்கைத் தமிழர்களின் மீது அக்கறை கொண்டுள்ளன. அந்த வகையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களையும் நீங்கள் சந்திக்கும் வாய்ப்புண்டா?

இம்றை இந்தியப் பிரதமரையும் தமிழக முதல்வரையும் சந்தித்திருக்கிறோம். நான் நினைக்கிறேன், இனி வருகின்ற காலங்களில் மற்ற தலைவர்களையும் சந்தித்து உதவி கேட்பது சரியாகவே இருக்கும். இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையில் சயாக அமையும்போது நீங்கள் குறிப்பிடும் சந்திப்புகளும் நிகழும்.

தற்போதைய இந்தியப் பயணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. இந்தப் பயணம் வெற்றியைத் தந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?

நிச்சயம் இது வெற்றிகரமான பயணம் தான். இந்தியா அல்லாது இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்பது கிடைக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் அனுசரணையோடுதான் தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்ற மிக உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவே எங்களது தற்போதைய நிலைப்பாடு.

இலங்கை விவகாரத்தைக் கவனிக்க சிறப்புத் தூதர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?

இந்த யோசனையை நாங்கள் வரவேற்கிறோம். சிறப்புத் தூதர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்து சயானது, வரவேற்கத்தகுந்தது. அப்படியான தூதர் ஒருவரோ அல்லது சிலரோ நியமிக்கப்பட்டால், இப்பிரச்சினை குறித்த விரிவானதொரு பார்வை டில்லி ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும். அத்தகைய தூதர்கள் இலங்கைக்கு வருகை தரும்போது அங்குள்ள தமிழ் மக்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண இயலும். மக்களும் அரசுக்கும் இடையே எத்தகையதொரு இடைவெளி நிலவுகிறது என்பதை உணர்ந்து, அங்குள்ள நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்க இயலும்.

அடுத்த இந்தியப் பயணம் எப்போது?

இப்போதுதான் இரு முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில், மீண்டும் நாடு திரும்பி, அங்கு அங்கு ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள், பின்னேற்றங்களைக் கவனிப்போம். அவை குறித்து தமிழக அரசிடம் புது டெல்லி அரசாங்கத்திடம் முறைப்படி தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நன்றி: வீரகேசரி

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.