ஈழம் - இலங்கைச் செய்திகள்
ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 06:30:02 AM GMT    ]

அரச படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை, ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா, அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பத்திரிகை சங்கத்தில் நேற்று உரையாற்றியபோது,

இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு என்றுமில்லாத அளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும் தொகையானோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை, கடந்த வருடத்தில் புனர்நிர்மாண பணிகள் தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றம் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகியன பற்றி இரு அமைச்சர்களும் விளக்கி கூறினார்கள்.

ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு அதிபர் சுமிதக பூஜித தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரண்டு இலங்கை அமைச்சர்களும் வர்த்தகம், முதலீடு தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் சாதகமான நிலைமைகளை ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு எடுத்து விளக்கினார்கள்.

இலங்கையில் பணியாற்றிவரும் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய அரங்கில் இரு அமைச்சர்களும் உரையாற்றினர். மிகவும் கஷ்டமான கால கட்டங்களில் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உதவி குறித்து அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

சுமுக நிலையும் அமைதியும் தோன்றியுள்ளதை அடுத்து இலங்கையில் தங்கள் திட்டங்களை மேலும் விஸ்தரிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.