இந்தியச் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு - கருணாநிதி உத்தரவு

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 07:06:06 AM GMT    ]

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க திருமண நிதியுதவித் திட்டம், 1986-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் மணமகளின் பெற்றோருக்கு மட்டுமே நிதியுதவித் தொகை, வருமான உச்சவரம்புக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி வருமான உச்சவரம்பு இத்திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவித்தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.12,500 ரொக்கப் பணமாகவும், ரூ.12,500 தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தில் கூடுதலானோர் பயன்பெற முதல்-அமைச்சர் 1 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.