
கொழும்பு: சச்சின் இரட்டை சதம், ரெய்னா சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டில் இமாலய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, முன்னிலை பெற்றது. இலங்கை பவுலர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டி "டிராவில்` முடிவது உறுதியாகி உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்` செய்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 3 வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4 ம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், ரெய்னா ஜோடி அபார ஆட்டத்தை தொடர்ந்தது. தம்மிகா பிரசாத் பந்து வீச்சில் ஒரு "சூப்பர் பவுண்டரி` அடித்த ரெய்னா, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். 12 பவுண்டரி 2 சிக்சருடன் 120 ரன்கள் குவித்த ரெய்னா, மெண்டிஸ் சுழலில் வெளியேறினார். 5 வது விக்கெட்டுக்கு சச்சின், ரெய்னா ஜோடி 256 ரன்கள் சேர்த்தது.
பின்னர் சச்சினுடன், தோனி இணைந்தார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், டெஸ்ட் அரங்கில் 5 வது முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 203 ரன்களுக்கு (23 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டானார். மறுமுனையில் தோனி, டெஸ்ட் அரங்கில் 18 வது அரை சதம் கடந்தார். 76 ரன்கள் (7 பவுண்டரி) எடுத்த தோனி, தில்ஷன் சுழலில் பெவிலியன் திரும்பினார்.
பின்வரிசையில் ஹர்பஜன் (0), ஏமாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதுன், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் 41 ரன்களுக்கு அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 669 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இஷாந்த் (10), ஓஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் மெண்டிஸ் 4, தில்ஷன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது. இதனால் கொழும்பு டெஸ்ட், "டிரா`வில் முடிவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
அறிமுக வீரராக களமிறங்கி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இதன் மூலம் இச்சாதனை படைக்கும் 12 வது இந்திய வீரரானார். கடந்த 2001 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய சேவக், சதம் அடித்திருந்தார். அதற்குப் பின், 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரெய்னா இச்சாதனை படைத்துள்ளார். அறிமுக டெஸ்டில் சதம் கடந்த இந்திய வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு
லாலா அமர்நாத் 118 இங்கிலாந்து 1933
தீபக் சோதன் 110 பாகிஸ்தான் 1952
கிரிபால் சிங் 100* நியூசிலாந்து 1955
அப்பாஸ் அலி 112 இங்கிலாந்து 1959
அனுமந்த் சிங் 105 இங்கிலாந்து 1964
குண்டப்பா 137 ஆஸ்திரேலியா 1969
சுரீந்தர் அமர்நாத் 124 நியூசிலாந்து 1976
அசாருதின் 110 இங்கிலாந்து 1984
பிரவீண் ஆம்ரே 103 தென் ஆப்ரிக்கா 1992
சவுரவ் கங்குலி 131 இங்கிலாந்து 1996
சேவக் 105 தென் ஆப்ரிக்கா 2001
சுரேஷ் ரெய்னா 120 இலங்கை 2010
கொழும்பு டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் சச்சின், 5 வது முறையாக இந்த இலக்கை எட்டியுள்ளார். இதன் மூலம் அதிக முறை இரட்டை சதம் பதிவு செய்த வீரர்கள் வரிசையில், 5 வது இடத்தை இந்தியாவின் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார் சச்சின். இப்பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (12 முறை) உள்ளார். அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர்கள்:
வீரர் போட்டி 200
பிராட்மேன் (ஆஸி.,) 52 12
லாரா (வெ.இண்டீஸ்) 131 9
ஹம்மண்ட் (இங்கிலாந்து) 85 7
சங்ககரா (இலங்கை) 90 7
சேவக் (இந்தியா) 78 6
அட்டபட்டு (இலங்கை) 90 6
ஜெயவர்தனா (இலங்கை) 112 6
மியாண்தத் (பாக்.,) 124 6
டிராவிட் (இந்தியா) 141 5
பாண்டிங் (ஆஸி.,) 146 5
சச்சின் (இந்தியா) 168 5
* இந்தியா தரப்பில் அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர்கள் வரிசையில் டிராவிட்டுடன் இணைந்து இரண்டாவது இடம் பெற்றார் சச்சின். இப்பட்டியலின் முதலிடத்தில் சேவக் (6 முறை) உள்ளார்.
முதல் டெஸ்டிலேயே முத்திரை பதித்துள்ளார் ரெய்னா. காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங் கொழும்பு டெஸ்டிலிருந்து நீக்கப்பட்ட, ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்தி சதம் கடந்துள்ளார். இது குறித்து ரெய்னா கூறியது: முதல் டெஸ்ட் போட்டி என்பதால், சற்று நெருக்கடியுடன் தான் களமிறங்கினேன். ஆனால் சச்சின் எனக்கு உற்சாகம் அளித்தார். " முதல் டெஸ்டில் விளையாடும் அனுபவம் இனி கிடைக்காது, அதனால் மகிழ்ச்சியுடன் விளையாடு.
ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளாய், டெஸ்ட் போட்டியிலும் சாதித்துக் காட்டு, என சச்சின் நம்பிக்கை அளித்தார். டெஸ்டில் சச்சினுடன் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எனது கனவு தற்போது நனவாகி உள்ளது. முதல் போட்டியில் சதம் கடந்திருப்பது, மிகுந்த மிகழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.
பாரத ரத்னாவுக்கு தகுதி : ஆஷா போன்ஸ்லே
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வெல்ல, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன, என பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: தனது சிறப்பான ஆட்டத்தால், கிரிக்கெட் அரங்கில் அசத்தி வரும் சச்சின், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அவர் பேட்டிங் செய்வது, ஒரு இசை கலைஞர் ராகம் இசைப்பது போல உள்ளது. சோபர்ஸ், கிளைவ் லாய்டு, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பார்த்துள்ளேன். ஆனால் அவர்களிடமிருந்து தனித்த திறமையுடன் வேறுபட்டுள்ளார் சச்சின். வரும் 2011 ம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில், நடக்க உள்ள உலககோப்பை தொடரில் சச்சின், சிறப்பாக விளையாட வேண்டும். அவர் மனம் விரும்பும் வரை, கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அவருடன் இணைந்து பாட வேண்டும் என நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 642/4 ("டிக்ளேர்`)
இந்தியா
முரளிவிஜய் எல்.பி.டபிள்யு.,(ப) மெண்டிஸ் 58 (124)
சேவக் (ஸ்டெம்)பிரசன்னா (ப) ரந்திவ் 99 (101)
டிராவிட் எல்.பி.டபிள்யு.,(ப) ரந்திவ் 3 (18)
சச்சின் (கே) பிரசன்னா (ப) தில்ஷன் 203 (347)
லட்சுமண் எல்.பி.டபிள்யு.,(ப) மெண்டிஸ் 29 (98)
ரெய்னா (கே) சங்ககரா (ப) மெண்டிஸ் 120 (228)
தோனி (கே)+ (ப) தில்ஷன் 76 (138)
ஹர்பஜன் (கே) சங்ககரா (ப) தில்ஷன் 0 (3)
மிதுன் (ப) மெண்டிஸ் 41 (97)
இஷாந்த் -அவுட் இல்லை- 10 (40)
ஓஜா -அவுட் இல்லை- 0 (4)
உதிரிகள் 30
மொத்தம் (198 ஓவரில் 9 விக்., இழப்பு) 669
விக்கெட் வீழ்ச்சி: 1-165(சேவக்), 2-169(முரளிவிஜய்), 3-173(டிராவிட்), 4-241(லட்சுமண்), 5-497 (ரெய்னா), 6-592 (சச்சின்), 7-592 (ஹர்பஜன்), 8-643 (தோனி), 9-668 (மிதுன்).
பந்து வீச்சு: தம்மிகா பிரசாத் 19-1-96-0, பெர்னாண்டோ 31-1-116-0, மாத்யூஸ் 9-1-24-0, ரந்திவ் 64-14-212-2, மெண்டிஸ் 54-7-157-4, தில்ஷன் 21-4-50-3.