இந்தியச் செய்திகள்
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சோனியா தீவிர முயற்சி - ஜெயந்தி நடராஜன் எம்.பி. தகவல்

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:33:29 AM GMT    ]

பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா, டெல்லி மேல்-சபையில் நிறைவேறி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல், நிலுவையில் இருந்து வரும் இந்த மசோதாவை பாராளுமன்றத்திலும் நிறைவேற்றி விட்டால், விரைவில் சட்டமாகி விடும்.

எனவே, தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பு சார்பாக, டெல்லியில் நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கிச் சென்ற அந்த பேரணியில், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். வண்ண வண்ணக் குடைகளை ஏந்திய வண்ணம் சென்றனர். பாராளுமன்றத் தெரு காவல் நிலையம் அருகே பேரணி சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு, பெண்கள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத், திரைப்பட நடிகைகள் ஷர்மிளா தாகூர், ஷபானா ஆஸ்மி, விமல் தொராத், ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் ஜாவித் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடந்த இந்த பேரணியில் பங்கேற்றவர்களுடன் நேரடியாக எனது கருத்தை தெரிவிக்க விரும்புவதால் இந்தியில் பேசுகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த எனது இந்தி பேச்சில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியாக உள்ளனர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே, டெல்லி மேல்-சபையில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.

தற்போது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. எனினும், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின்போது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பாராளுமன்றத்துக்கு 33 சதவீதம் பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சி சார்பாக மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறேன்.

இவ்வாறு ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசினார்.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.