உலகச் செய்திகள்
"இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானுடன் பேசுவேன்'' - இங்கிலாந்து பிரதமர் உறுதி

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:36:08 AM GMT    ]

இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி விடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் பேசுவேன் என்று டெல்லி வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, டேவிட் கேமரூன் கூறியதாவது:-

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் லண்டன் தெருக்களில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும்.

அதற்கு சிறந்த வழி, பாகிஸ்தானுடன் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பேச்சு நடத்துவதுதான். அடுத்த வாரம் நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் இதுதொடர்பாக பேச்சு நடத்துவேன். லஸ்கர்-இ-தொய்பாவோ, தலீபானோ, அல்-கொய்தாவோ எதுவாக இருந்தாலும், அதனுடன் போரிடும் வகையில் பாகிஸ்தானை தயார்படுத்த வேண்டும்.

தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது என்று இந்திய பிரதமர் கூறியது சரியானதுதான். இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


இந்த கூட்டு பேட்டியில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்கள், தங்கள் மண்ணில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று என்னிடமும், எனக்கு முன்பிருந்த பிரதமர்களிடமும் பாகிஸ்தான் உறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை பாகிஸ்தான் காப்பாற்றும் என்று நம்புகிறேன்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த அக்கறை செலுத்துவது போல, இந்திய எல்லையிலும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அக்கறை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும்.

டேவிட் கேமரூனுடன் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றியும் பேசினேன். தீவிரவாதம் இந்த பிராந்தியத்துக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக இருவரும் ஒப்புக்கொண்டோம். தீவிரவாதத்தை நியாயப்படுத்த கூடாது என்பதையும் ஒப்புக் கொண்டோம். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.