இந்தியச் செய்திகள்
10 கோடி கையெழுத்துக்களுடன் மனு - ஜனாதிபதியிடம், பா. ஜனதா தலைவர்கள் நேரில் வற்புறுத்தல்

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:37:38 AM GMT    ]

10 கோடி கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை, ஜனாதிபதியை நேரில் சந்தித்து, பாரதீய ஜனதா தலைவர்கள் கொடுத்தனர். "விலைவாசி உயர்வு பிரச்சினையில், ஜனாதிபதி உடனே தலையிட வேண்டும்`` என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி விவாதிக்க, சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் மீரா குமார் ஏற்கவில்லை.

இந்த நிலையில் பாரதீய ஜனதா தலைவர்கள் இந்தியா முழுவதும் 10 கோடி பேர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். இந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுவுடன், நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு, பா. ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையில் பாரதீய ஜனதா தலைவர்கள் சென்றார்கள்.

தேசிய பா.ஜனதா தலைவர் கட்காரி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, முன்னாள் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், மற்றும் முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள் சென்றார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் வெளி கேட்டில் இருந்து, ஜனாதிபதி மாளிகையின் உள் கேட் வரை பா. ஜனதா தலைவர்கள் நடந்து சென்றார்கள். பின்னர் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து மனு கொடுத்தார்கள்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பிரசாரம் செய்து மக்களிடம் ஓட்டு வாங்கினார்கள். ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது.

இதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம். இந்த அரசு எந்தவித குறிக்கோளும் இன்றி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. விலைவாசி உயர்வு பிரச்சினையில் ஜனாதிபதி உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அரசு உணவு பொருள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு இருந்த ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருள் மழையால் நாசம் அடைந்து இருக்கிறது. இவற்றை பாதுகாக்க இந்த அரசால் முடிய வில்லை.

சீனாவில் பணவீக்கம் 2.7 சதவீதமாகவும், அமெரிக்காவில் 2.76 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 0.9 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பண வீக்கம் 11 சதவீதமாக உயர்ந்து விட்டது. இது போன்ற பிரச்சினையிலும் ஜனாதிபதி தலையிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனு கொடுத்த பின் அத்வானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலைவாசி உயர்வு நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்துக்குள்ளும் இந்த பிரச்சினையை பல முறை நாங்கள் எழுப்பி விட்டோம். ஆனால் பலன் இல்லை. எனவே ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம்.


அத்தியாவசிய பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது ஒன்றே அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வழி. இதை அரசு உடனே செய்ய வேண்டும். உணவு பதுக்கலில் ஈடுபடும் கள்ள மார்க்கெட்டுக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோக துறையை சீர்படுத்த வேண்டும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.